Wednesday, December 8, 2010

1. ஹரிலால்

மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஓர் இஸ்லாமிய நண்பரைச் சந்தித்த்தேன். மிதவாத நோக்கு கொண்டவர், அறிஞர் என்பது அவரைப்பற்றிய என் கணிப்பு. நான் எழுதும் காந்தியைப் பற்றிய கட்டுரைகளைப் பற்றி இயல்பாகப் பேச்சுவந்தது. அவர் ”காந்தியைப்பற்றி நாம தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அவர் வேற ஆளு. அந்த உண்மைகளை எல்லாம் மறைச்சிட்டாங்க…” என்றார்.
நான் ”என்ன உண்மைகள்?” என்றேன். அவர் ”காந்தியின் பிள்ளைங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவங்களைப்பத்தி யாருமே பேசறதில்லை. அவங்களிலே ஒருத்தர் பாகிஸ்தானுக்குப் போய் அங்கேதான் இருந்து இறந்தார். காந்தியைப்பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லியிருக்கார்” என்றார்.
நான் ”ஹரிலால் காந்தியைச் சொல்கிறீர்களா? அவர் முஸ்லீமாக மதம் மாறினாரே ஒழிய பாகிஸ்தானுக்குப் போகவில்லையே” என்றேன். ”இல்லை. இவர் இன்னொருத்தர். இவர் காந்தி பெண்களுடன் படுத்ததைப் பாத்துட்டு காந்தியை வெறுத்து பாகிஸ்தான் போய்ட்டார்” என்றார். எனக்கு அப்படி ஒரு தகவலே இல்லை. நான் உறுதியாக ”இல்லை. அவரது நான்கு மைந்தர்களைப் பற்றியும் என்னால் உறுதியாகவே பேசமுடியும்… ” என்றேன்
”உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…அரசாங்கம் பொய்சொல்றதைத்தான் நீங்களும் சொல்றீங்க. காந்தி அவரோட மகன்களை அவமானம் பண்ணி துரத்திவிட்டார். அவங்க அவரை வெறுத்தாங்க, நாட்டைவிட்டே ஓடிப்போனாங்க…” என்றார். நான் தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தேன். கல்யாணப்பந்தி. சாப்பிட்டபடியே நான் பேசிய கொஞ்சநேரத்தில் கண்டுகொண்டேன் நான் சொல்வதைக் கவனிக்கவே நண்பர் தயாராக இல்லை.
என் வழக்கமான குசும்புக்கு ஏற்ப வேண்டுமென்றே பிடிவாதமாகப் பேசினேன். நண்பர் கழிப்பறை நோக்கி பாய்ந்து செல்ல நானும் கூடவே சென்றேன். கழிப்பறை வாசலில் காத்து நின்று அவர் வெளியே வந்ததும் மீண்டும் பேச ஆரம்பித்தேன். நண்பர் தவியாய் தவித்தார். உள்ளூரச் சிரித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் அனுதாபம் தோன்றி விட்டுவிட்டேன். அவர் பாய்ந்து காணாமல் போனார்.
என் அனுபவத்தில் காந்தியைப்பற்றிய நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை அனேகமாகக் கண்டதே இல்லை — மனுஷ்யபுத்திரன் மட்டுமே ஒரு இடத்தில் காந்தியைப்பற்றிய சாதகமான ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய மதச்சூழலில் காந்தியைப் பற்றிய அவதூறுகள் ஒரு நூற்றாண்டுக்காலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைக் கேட்டே அவர்கள் வளர்கிறார்கள். அவற்றை மறுபரிசீலனை செய்யுமளவுக்கு வாசிப்பும் அவர்களிடம் இருப்பதில்லை.
ஆனால் அதைவிட முக்கியமான வினா அவதூறுகளை யார் சொன்னாலும் உடனடியாக நம்பும் மனநிலை அவர்களிடம் எப்படி உருவாகிறது என்பதுதான். ஆதாரங்கள் முன்வைக்கப்படும்போது அதைக் கேட்காமல் போகும் அந்தப் பொறுமையின்மை எப்படி வருகிறது? காந்தியை நிராகரிப்பதென்பது இந்தியாவின் சாரமான ஒரு பண்புநிலையை நிராகரிப்பது. அதைச்செய்யாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ இந்து அடிப்படைவாதத்தையோ தக்கவைத்துக்கொள்ள முடியாதென்பதே பதில். மதஅடிப்படைவாதம் பெரும்பாலும் எல்லா இஸ்லாமியர்களின் ஆழத்திலும் இருக்கும். கற்று, கனிந்துதான் சிலர் வெளியே வரமுடியும்.
இஸ்லாமிய மதத்தை தழுவிய ஆறே மாதத்தில் மலையாள எழுத்தாளர் கமலா சுரையா காந்தியை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். ‘தன் சொந்த பிள்ளைளை உயர்நிலைக்குக் கொண்டுவராத காந்தி என்ன ஒரு மகாத்மா?’ என்றார் அவர். காந்தி தன் பிள்ளைகளை அவமதித்தார், கொடுமைப்படுத்தினார், அவர்கள் அவரை நிராகரித்தார்கள் என்ற வழக்கமான பல்லவியைப் பாடினார். காந்தியை நிராகரித்து ஹரிலால் இஸ்லாமுக்கு மாறியதை துதித்தார். ‘சொந்த மக்களின் முன்னேற்றமே வாழ்க்கையின் சாரமாக கருதும் கெ.கருணாகரன் அல்லவா உண்மையான மகாத்மா’ என்று அதற்கு கல்பற்றா நாராயணன் கிண்டலாக பதில் சொல்லியிருந்தார்.

No comments: