Monday, December 13, 2010

சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். அவர்கள்

நேரிலோ, சினிமாவிலோ, பிற ஊடகங்களிலோ அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேயில்லாமலும் கூட சில நிஜ ஹீரோக்களை ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலேயே நமக்கு சட்டென்று பிடித்துப் போகின்றது.
தற்போதைய கோவை போலீஸ் கமிஷனர் டாக்டர். சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
இவரை ஒன்றிரண்டு முறை சில டிவி பேட்டிகளில்தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே என்னை அவர் ரசிகனாக்கிக் கொண்டார். அவரது பேச்சில் வெளிப்படை, உண்மை, அழுத்தம், கம்பீரம், தயக்கமற்ற தன்மை, சுகமான கிராமீயத் தமிழ் என ஈர்க்கப் போதுமான அனைத்துமே இருக்கின்றன. சமீபத்திய கோவை என்கவுண்டரின் உற்சாகத் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வு நிச்சயமாக எழுதப்படவில்லை. அதைப் பற்றிய மாற்றுக்கருத்துகள் நமக்கு இருக்கலாம்.
சமீபத்திய ஒரு பேட்டியில் சினிமாக்களில் காட்டப்படும் ஸ்பெஷல் விளக்குகளுடன் கூடிய விசாரணை அறைகள் பற்றிக் கேட்டபோது, மெல்லிய புன்னகையுடன் 'அது அவர்களின் கற்பிதங்கள், தமிழகத்தில் இருக்கும் சுமார் 1000 காவல் நிலையங்களில் அதுபோல எங்குமே கிடையாது' என்றார். உங்களை எது இப்படியான சீருடைப்பணிக்குத் தூண்டியது என்ற கேள்விக்கு, மிடுக்கான உடையுடன் வந்து தன்னை ஈர்த்த, 'NCC' குழுவையும் பார்த்துக்கொண்ட தன் பள்ளியாசிரியர்தான் என்றார். அவர் இவரை அந்த உடையை அணிந்துவரச்செய்து 'சைலேந்திரபாபு' என்று கம்பீரமாக மொழிந்த அந்த நாளையும் நினைவு கூர்ந்தார்.
Msc., (அக்ரி) படித்து வங்கி அதிகாரியாக பணியைத் துவக்கிய சைலேந்திரபாபு பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வென்று அஸிஸ்டெண்ட் சூபரிண்டண்ட்டாக காவல் பணியைத் துவங்குகிறார். பின்னர் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை சிட்டியின் துணை, மற்றும் இணை கமிஷனர் பதவிகளிலும் பணியாற்றி, திருச்சியில் டிஐஜியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது கோவையின் கமிஷனராக இருக்கிறார். இதற்கிடையே 'தமிழக சிறப்பு அதிரடிப்படை' ஐஜியாகவும் சில காலம் பணியாற்றி இருந்திருக்கிறார். குழந்தைகள் தொலைந்து போதலின் பின்னணி, அதற்கான நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுப்பணியும் மேற்கொண்டுவருகிறார்.
கராத்தே, நீச்சல், துப்பாக்கிசுடுதல் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.  உடலைப் பற்றி பேசும் போது, 'உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதக் கருவி. இதைக்கொண்டு எதையும் சாதிக்கலாம். நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் விஷயமே..' என்கிறார். இந்தச் செய்தியை, விழிப்புணர்வை குழந்தைகள், இளைஞர்களிடத்தே கொண்டுசெல்வதிலும் பெரும் ஆர்வமிருக்கிறது அவருக்கு. தமிழிலும், இலக்கியத்திலும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கிறார். 'உடலினை உறுதி செய்', 'நீங்களும் ஐபிஎஸ் அதிகாரியாகலாம்' 'Be Ambitious' போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
தலைவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தங்கள் காவல் பணியின் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற பெருமையோடு இந்தக்குறளை எடுத்தாள்கிறார் தன் பேச்சில்..

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.   

கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம். ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது. ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே

No comments: